Friday 6 February 2015

புற்றுநோயால் தலைமுடியை இழந்த பெண்களுக்கு நீண்ட கூந்தலை தானமாக வழங்கிய கல்லூரி மாணவிகள்

பெண்களுக்கு அழகு நீண்ட நெடிய கருங்கூந்தல். அந்த கருங்கூந்தலை பராமரிப்பதே பல பெண்களின் தலையாய வேலைகளில் ஒன்றாக இருக்கிறது.
செழித்து வளர்ந்து கிடக்கும் தலைமுடியை கோதி விடும் போது சீப்பில் சிக்கி ஓரிரு முடிகள் உதிர்ந்தாலே அவர்கள் துடித்து போவார்கள். அதிலும் இளம்பெண்களாக இருந்தால் கேட்க வேண்டியதில்லை.
ஒரு நாளைக்கு ஒரு முடியை இழந்தாலும் ஆண்டுக்கு 365 முடிகள் போய்விடுமே... என்று ஏங்கி தவிப்பார்கள். முடியை பாதுகாக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.

பாதி முடியை வெட்டி கொடுத்த இளம்பெண்கள்! அதுவும் கோவிலுக்கு காணிக்கையோ, வேண்டுதலோ அல்ல....!





எங்கோ... யாரோ... கொடிய நோயான புற்றுநோயால் உருக்குலைந்து மொத்த தலைமுடியையும் இழந்து பரிதாபமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காகத்தான் இந்த இளம்பெண்கள் தங்கள் தலைமுடியை அர்ப்பணித்து இருக்கிறார்கள்.
உயிருக்கு போராடும் தன் சொந்தங்களுக்காக கூட ஒரு பாட்டில் குருதியை கொடுக்க விரும்பாதவர்கள் மத்தியில்தான் இவ்வளவு பெரிய துணிச்சலான முடிவை... முடி கொடையை இந்த இளம்பெண்கள் வழங்கி இருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான மாணவிகள் மத்தியில் இவர்கள் வித்தியாசமானவர்கள். எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர்கள்.
இந்த முடி கொடை கொடுக்கும் உணர்வு உள்ளப்பூர்வமாக உருவான விதம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
இந்த கல்லூரியில் மாணவியர் ரோட்டரி சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் மாணவிகளில் சிலர் ‘யு டியூப் பார்த்த போது அதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘முடி தானம் செய்யலாம் என்ற தகவலை அறிந்து இருக்கிறார்கள். அதற்காக சில மாணவிகள் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்கள். அப்போது அங்கு புற்று நோய்க்கு சிகிச்சை பெறும் சிறுவர்கள், இளம்பெண், இளைஞர்கள், முதியவர்கள் என்று பல தரப்பினரும் தலைமுடியை இழந்து பார்க்கவே பரிதாபமாக அமர்ந்திருந்தார்கள். புற்று நோய் சிகிச்சைக்கு ‘கியூமோதெரபி சிகிச்சை கொடுக்கும் போது தலையில் உள்ள முடி கொத்துக் கொத்தாக கீழே விழுந்து விடுகிறது. தலைமொட்டையாக காட்சியளிக்கிறது.




 இந்த கஷ்டத்தை அனுபவிக்காமல் இருப்பதற்காக நோயாளிகள் சிலருக்கு முன்னதாகவே மொட்டையடித்துவிட்டு கியூமோ தெரபி சிகிச்சை அளிக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் படிக்கவும், பணிகளுக்கும் செல்லும் போது தலைமுடி இல்லாமல் வெளியே செல்ல கூச்சப்படுகிறார்கள். வசதி படைத்தவர்கள் ‘விக் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஒரு விக் விலை ரூ.20 ஆயிரம் வரை இருக்கிறது. இதை எல்லோராலும் வாங்க முடியவில்லை.
எனவே, நலிந்த 16 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, தங்கள் தலை முடியை கொடையாக கொடுத்து ‘விக் தயாரித்து வழங்க இந்த கல்லூரி மாணவிகள் முடிவு செய்தார்கள். அதற்காக கிரீன் டிரண்ட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ‘முடி கொடை வழங்கும் முடிவை எடுத்தனர்.




எத்தனை மாணவிகள் இதில் சேர்ந்து ‘முடியை துறக்க தயாராக இருப்பார்கள் என்ற சந்தேகத்துடனேயே, ரோட்டரி மாணவிகள் இந்த பணியை தொடங்கி உள்ளனர். ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக... அதுவும் 2,500 மாணவிகள் தங்கள் அழகிய தலை முடியை தானமாக கொடுக்க முன் வந்தார்கள். அவர்களிடம் இருந்து 50 கிலோ முடி பெறப்பட்டது. இதன் மூலம் சுமார் 200 ‘விக்குகளை தயாரிக்க முடிந்தது. மூன்று அளவுகளில் விக்குகள் தயாரித்தனர்.
குட்டை, நடுத்தரம், நீளம் ஆகிய 3 விதமான விக்குகள், முடியை தரம் பிரித்து அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஒரு விக் தயாரிக்க ரூ.4,500 செலவானது. இதற்கான மொத்தச் செலவு ரூ.12 லட்சத்தையும் மாணவிகள் பலரிடம் நன்கொடையாகப் பெற்று தங்கள்–தியாக விருப்பத்தை நிறைவேற்றினார்கள். இது நடந்தது கடந்த ஆண்டு.
இன்று 2–வது ஆண்டாக மாணவிகள் முடி தானம் வழங்கும் நிகழ்ச்சி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடந்தது. முதலில் முடிதானம், அதனால் ஏற்படும் ஆத்மதிருப்தி, நோயுற்றோருக்கு உதவும் மனநிறைவு பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இதையடுத்து, நூற்றுக்கணக்கான மாணவிகள் ஆர்வத்துடன் வந்து, தங்களால் முடிந்த அளவுக்கு முடியை வெட்டி எடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்.







இடுப்பு வரை அசைந்தாடி தனக்கு அழகு சேர்த்த, பல ஆண்டுகள் பராமரித்து வளர்த்த நீண்ட அழகு கூந்தலில் சிலர் 8 அங்குலம், சிலர் 5 அங்குலம், சிலர் 12 அங்குலம் முடிகளை கொடுத்தனர். ஒரு சில மாணவிகள் தங்கள் தலைமுடி முழுவதையும் கொடுக்கவும் தயாராக இருந்தனர்.
பி.பி.ஏ. 3–வது ஆண்டு மாணவி மீரா தேவி. இவர்தான் இந்த ஆண்டு கல்லூரி ரோட்டரி சங்கத்தின் தலைவி. முடி தானம் நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்துகிறார். இவருக்கு 23 அங்குலத்துக்கும் மேல் நீளமான தலைமுடி கடந்த ஆண்டு இருந்தது. அதில் 16 அங்குலம் தலைமுடியை தானம் செய்து விட்டார். அதன்பிறகு அடர்ந்து வளர்ந்த தலைமுடியில் இந்த ஆண்டும் குறிப்பிட்ட அளவு தானம் செய்கிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது....
‘‘புற்று நோயாளிகள் அனுபவிக்கும் வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது. தலைமுடி போனதால் களை இழந்து காணப்படும் அவர்களுக்கு என்னால் பண உதவி செய்ய முடியாது. நம்மால் எதை செய்ய முடியுமோ அதை செய்யலாம் என்று ‘முடியை கொடுக்க முடிவெடுத்தேன். 3 வருடமாக பராமரித்து வளர்த்து வந்த எனது கூந்தலால் எனக்கு கிடைத்த அழகையும், சந்தோஷத்தையும் விட புற்று நோயாளிகளுக்கு இதை வழங்குவதால் அவர்கள் பெறும் சந்தோஷமே முழு நிறைவை தந்தது என்றார்.
இன்னொரு மாணவி சுமையா. இவர் தான் கடந்த ஆண்டு தலைமை தாங்கி இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்.
இவர் கூறும் போது, நான் தமிழ் முஸ்லீம் பொண்ணு... எனது பெற்றோர் மிகவும் கட்டுப்பாடானவர்கள். நேரடியாக கேட்டால் சம்மதிக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். எனவே 15 அங்குல முடியை வெட்டிக் கொடுத்துவிட்டு அதன் பிறகுதான் அந்த தகவலை வீட்டுக்கு தெரிவித்தேன். இப்போது ஓரளவு தலைமுடி வளர்ந்து இருக்கிறது. கொடுக்க ஆசைதான். ஆனால் இன்னும் ஒரு வருடத்தில் எனக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே கொடுக்க முடியவில்லை.... என்று ஆதங்கப்பட்டார்.
கவலைப்பட்டால் கூட தலையில் கை வைப்பதை தவறு என்று கூறும் தமிழ் சமுதாயத்தில், தலை முடியில் கை வைக்க தயங்கும் தமிழ் பெண்கள் மத்தியில்... இந்த மாணவிகள் செய்த தியாகம் கோபுரமாய் உயர்ந்து நிற்கிறது.
‘வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று சொன்ன வள்ளலாரைப் போல நோயுற்று வாடி வதங்கும் நோயாளிகளுக்காக இவர்கள் வழங்கிய சாதாரண முடியாக இருக்கலாம். ஆனால் ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகளுக்கு இவர்கள் சூட்டி இருப்பது மணிமுடி. மனதில் அன்பையும், பிறருக்கு எப்படி வேண்டுமானாலும் உதவலாம் என்ற பண்பையும் இந்த மாணவிகள் விதைத்திருக்கிறார்கள்.
சாதாரண மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் தியாகத்துக்கு மகாமனிதர்கள் என்ற மகுடத்தை காலம் சூட்டும்.




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.